பொய்யாக உருவாக்கப்பட்ட கதைகளால் சஃப்தார் அலியின் வீடு பலியானது எப்படி?

தான் ஒரு முஸ்லிம் என்பதால் தனது வீடு இடிக்கப்பட்டது என்பது சஃப்தார் அலிக்குத் தெரியும். ஊடகங்களால் திட்டமிட்டு அவர் இலக்காக்கப்படுகிறார் என்பதும் தெரியும்.
தான் ஒரு முஸ்லிம் என்பதால் தனது வீடு இடிக்கப்பட்டது என்பது சஃப்தார் அலிக்குத் தெரியும். ஊடகங்களால் திட்டமிட்டு அவர் இலக்காக்கப்படுகிறார் என்பதும் தெரியும்.

சஃப்தார் அலிக்கு வயது 78. 1970-களில் கட்டப்பட்ட அவரது வீடு, அவரின் இரண்டு மகன்களான சையத் கமர் அப்பாஸ் மற்றும் சையத் ஃபராஸ் அப்பாஸ் ஆகியோருக்குச் சொந்தமானது. தங்கள் விவசாய நிலம் ஒன்றை விற்று வந்த பணத்தை வைத்து, 2002-இல் அந்த வீட்டை வாங்கினர். அப்போதிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எந்தவொரு சட்டவிரோதக் கட்டுமானம் குறித்தும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (PDA) எந்த ஒரு அறிவிப்பையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனால் மார்ச் 2, 2023 அன்று காலை, இரண்டு அல்லது மூன்று ஆண்கள் வீட்டின் வெளியே உள்ள சுவரில் எதையோ ஒட்டிக்கொண்டிருந்ததை சஃப்தாரின் அண்டை வீட்டார் கண்டனர். ஒட்டிமுடித்ததும் அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு, பின்னர் ஒட்டியதைக் கிழித்தெடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர். வந்தவர்கள் யாரும் சஃப்தார் வீட்டில் இருந்தவர்களிடம் பேசக்கூட இல்லை. வீட்டிலிருந்தவர்களும் அவர்கள் வந்துபோனதைக் கவனிக்கவில்லை. அதன்பின்பு சில மணி நேரங்களில் சஃப்தாரின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது.

பிரயாக்ராஜில் (முன்னர் அலகாபாத்) உள்ள தனது கடையில் சஃப்தர் அலி இருந்தபோது, வீட்டிலிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவரது வீட்டை இடிக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அலகாபாத் மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் வந்திருப்பதாகத் தகவல் கூறப்பட்டது. அவர் விரைந்து சென்று பார்த்தபோது, அவரது அக்கம் பக்கத்தினர் தடுப்புகளால் சூழப்பட்டிருப்பதையும், அவரது குடும்பத்தினர் செய்வதறியாது வெளியே நின்றுகொண்டிருப்பதையும், அந்தப் பகுதியில் இருந்த ஒரே முஸ்லிம் வீட்டை இடித்துத் தள்ள புல்டோசர்கள் தயாராக நிற்பதையும் கண்டார். அவர்களைக் காலி செய்ய அவகாசம் கொடுக்கப்படவில்லை. அதிகாரிகள் எந்த உத்தரவையும் காட்டவில்லை. விளக்கம் கேட்டு அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபோதும், “உங்கள் கட்டுமானம் சட்டவிரோதமானது” என்று மட்டும் அவர்களிடம் கூறப்பட்டது. அவ்வளவுதான். இடிப்பு கிட்டத்தட்ட உடனடியாகத் தொடங்கியது. அலகாபாத் மேம்பாட்டு ஆணைய ஊழியர்கள் சில உடைமைகளை எடுத்துச் சென்றனர். ஆனால் சஃப்தார் குடும்பத்தினருக்குச் சொந்தமான பெரும்பாலானவை இடிபாடுகளுக்குள் புதைந்தன. சமையலறை, படுக்கையறைகள், அலமாரிகள் என சஃப்தாரின் குடும்பத்தினர் பல பத்தாண்டுகளாக வசித்துவந்த அந்தக் கட்டிடம், சில மணி நேரங்களுக்குள் தூசியாக மாறியது.

சட்டவிரோதக் கட்டுமானம் என்று கூறுவதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லாதபோதும், இடிப்பதற்காக ஏதோ ஒன்றை அதிகாரப்பூர்வ காரணமாகக் கூறப்பட்டபோதிலும், அவரது வீடு குறிவைக்கப்பட்டதற்குச் சொல்லப்படாத ஒரு காரணம் இருந்தது. சஃப்தார் அலி அந்தப் பகுதியில் சொந்தமாக வீடு வைத்திருந்த ஒரே முஸ்லிம். அதன் பொருள் என்னவென்பதையும் அவர் அறிந்திருந்தார். அவர் நீண்ட காலமாக உரிமம் பெற்ற ஒரு துப்பாக்கிக் கடையை நடத்தி வந்தார். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், அவரது பெயர், பிரபல குண்டர் கும்பலைச் சேர்ந்தவரும் அரசியல்வாதியாக மாறியவருமான அதிக் அகமதுவுடன் தொடர்புபடுத்தி சில கிசுகிசுக்கள் அக்கம்பக்கத்தில் பரவத் தொடங்கின.

“நான் அவருக்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வழங்கியதாகவும், நான் அவருக்கு நெருக்கமாக இருந்ததாகவும் ஊடகங்கள் கூறுகின்றன. அவர்கள் இதை எப்படி கண்டுபிடித்தார்கள்? பொதுவெளியில் அதிக் அகமது ஒரு பிரபலமான நபர். அவர் ஓர் எம்.பி.யாகவும் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். மற்றவர்களுக்கு அவரை எந்தளவுக்குத் தெரியுமோ, அந்தளவுக்குத்தான் எனக்கும் அவரைத் தெரியும். அதைத் தவிர்த்து அவருடன் எனக்கு எந்தத் தொடர்பும் எனக்கு இல்லை” என்கிறார் சஃப்தார் அலி.

நீதிக்குப் புறம்பாகத் தண்டனை வழங்கும் நோக்கில் கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (அஜய் சிங் பிஷ்ட் என்பது அவரது இயற்பெயர்) தீவிரமாக முன்னெடுத்ததால், அவருக்கு “புல்டோசர் பாபா” என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது. இவ்வாறாக, அதிக் அகமதுவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையதாகக் கூறி, எந்தவோர் ஆதாரமுமின்றி ஏராளமான கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 2023-இல் உமேஷ் பால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆதித்யநாத்தால் இது ஒரு வெளிப்படையான கொள்கையாக அறிவிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உ.பி. மாநில சட்டமன்ற உறுப்பினரான ராஜு பால் கொலை தொடர்பான 2005ஆம் ஆண்டு வழக்கில், உமேஷ் பால் ஒரு முக்கிய சாட்சியாக இருந்தார். அந்த நேரத்தில் ஏற்கனவே சிறையில் இருந்த அதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரஃபும் தான் இந்தக் கொலைகளைத் திட்டமிட்டதாகப் பரவலாகச் சந்தேகிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு, அதிக் அகமது முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார். முந்தைய ஐந்து தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பிரயாக்ராஜில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவர், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதன்பின் நவம்பரில் அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தன் சகோதரர் அஷ்ரஃபை நிறுத்தினார். அந்தத் தேர்தலில் அஷ்ரஃப் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜு பால் தோற்கடித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அந்தத் தோல்வியால் நேர்ந்த அவமானத்திற்குப் பழிவாங்க, இரண்டு மாதங்கள் கழித்து அதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரஃபும் ராஜுவைக் கொன்றதாக நம்பப்பட்டது. பின்னர், இந்தக் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, உண்மை என்னவென்று கண்டறிய சட்டப்படியான விசாரணையை நடத்துவதற்குப் பதிலாக, “விரைவான, உடனடி நீதி” என்கிற போர்வையில் தொடர்ச்சியான பழிவாங்கும் இடிப்புகள், கைதுகள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் நடத்தப்பட்டன. அதிக் அகமது மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீதான வழக்குகளை முறையான விசாரணையோ ஆதாரங்களோ இல்லாமல் காவல்துறை கட்டமைத்தது.

உமேஷ் கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குள், முதலமைச்சர் ஆதித்யநாத் சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, “நாங்கள் அவர்களைத் தூள் தூளாக்குவோம்” – என்று பின்னால் வரப்போவதை சமிக்ஞையாகச் சொன்னார். அடுத்தடுத்த வாரங்களில், சட்டப்பூர்வ உத்தரவுகளோ விசாரணைகளோ இல்லாமல், அதிக் அகமதுவுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட பல வீடுகளை புல்டோசர்கள் இடித்துத் தள்ளின. ஊடகங்களும் இதற்குப் பாதை அமைத்துக் கொடுப்பது போலவே செயல்பட்டன. உமேஷ் பால் கொலையைப் பரபரப்பாக்குதல், உணர்ச்சிகரமாகச் செய்திகளைக் காட்டுதல், அதிக் அகமதுவைக் குற்றத்தின் ஒரே முகமாக மாற்றுதல் என ஊடகங்கள் செயல்பட்டன. செய்தி வாசிப்பாளர்கள் கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை “கட்டாயமாகத் தேவையான ஒரு பழிவாங்கல்” என்ற கருத்தை முன்னிறுத்தினர். சட்டப்பூர்வமான நடவடிக்கைதான் அவசியம் என்கிற கருத்தைத் திட்டமிட்டே எங்கும் கூற மறுத்தன. இதன்மூலம், அரசு முன்னெடுக்கும் இத்தகைய அநீதியான இடிப்புகளை நீதியென்றே பொதுமக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.

இப்படியாக, கற்பனையாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒருமித்த கருத்து நிலவிய சூழலில், சஃப்தார் அலியின் வீடு மற்றொரு பலியாக மாறியது. அவரது வீட்டை இடித்ததற்குச் சட்டப்பூர்வமான நியாயம் கற்பிக்கப்படவில்லை. மாறாக, வதந்திகளும் அரசியல் அதிகாரமுமே நியாயங்களாக முன்வைக்கப்பட்டன. அவரது வீடு இடிக்கப்பட்ட நேரத்தில் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில்கூட, சஃப்தாருக்கும் அதிக் அகமதுவுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. இடிக்கப்பட்ட வீட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் 2020-இல் தொடங்கியதாக பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் (PDA) கூறியது. ஆனால், இடிக்கப்படும் வரை, அவரது வீடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பதாகத் தன் குடும்பத்திற்கு எந்த அறிவிப்போ தகவலோ கொடுக்கப்படவில்லை என்று சஃப்தார் அலி திட்டவட்டமாகக் கூறினார்.

சில நாட்களுக்குப் பிறகு, மார்ச் 16, 2023 அன்று, காவல்துறையினர் அவரது கடையில் சோதனை நடத்தினர். அதே மாதம் 2ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும், அதிகாரிகள் வருவதற்காக சஃப்தார் அலி கடையைத் திறந்து வைத்திருந்தார். அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால் அது எதுவுமே அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவரது வீட்டை இடித்ததன் மூலமாக, அவர்கள் ஏற்கனவே தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டனர். வெளிப்பார்வைக்காகவே இந்தச் சோதனை வெறும் சம்பிரதாயமாக நடத்தப்பட்டது.

ஒரு முஸ்லிம் என்பதால் தனது வீடு இடிக்கப்பட்டதென்று சஃப்தார் அலிக்குத் தெரியும். ஆனால் இதுபோன்று குறிவைக்கப்பட்டுப் பழி வாங்கப்படுவது திடீரென்று நடக்காது என்பதையும் அவர் அறிந்திருந்தார். இந்தப் பழிவாங்கல் நடவடிக்கை குறித்த கதைகள் உருவாக்கப்பட்டு, பரப்பப்பட்டு, அதன்பின்னரே ஊடகங்களால் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. “ஊடகங்கள் விலை போய்விட்டன” என்கிறார் சஃப்தார் அலி. செய்தி ஊடகங்கள் கதைகளைத் திரிப்பதையும், வீடுகள் இடிப்பதை நிருபர்கள் எவ்வாறு ஒரு நியாயமான நடவடிக்கையாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்பதையும் அவர் கவனித்திருந்தார். “எங்களை தவறு செய்தவர்களாகவும், எங்களை எதிரிகளாகவும் பொதுமக்களை நம்ப வைப்பதில் ஊடகவியலாளர்கள் அதிக கவனம் செலுத்தினர். ஊடகங்கள் தொடர்ச்சியாக இதே கதைகளைக் காட்டும்போது, மக்கள் அதை நம்பத் தொடங்குகிறார்கள்” என்றார் சஃப்தார் அலி.

இந்த நடவடிக்கையின் செயல்பாட்டு முறையை அவர் அறிந்திருந்தார். புல்டோசர், காவல்துறை, இடிபாடுகள் ஆகியவற்றின் ஒவ்வொரு காட்சியும் கவனமாக வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொரு கூறும் அரசின் நடவடிக்கையை நியாயமானதென்று பார்வையாளர்களை நம்பவைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஊடகங்கள் ஆதாரங்களைக் கேட்பதில்லை. உரிய நடைமுறை பின்பற்றப்படாததை அவை கேள்வி கேட்கவில்லை. மாறாக, “இடிக்கப்படும் இந்த வீடுகளும், அதில் வாழும் மக்களும் சட்டவிரோதமானவர்கள்” என்கிற அரசின் மடைமாற்றக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாகவே ஊடகங்கள் செயல்பட்டன. “உண்மையான செய்திகளைக் காட்டுபவர்களும் வெளியிடுபவர்களும் மிகக் குறைவு. மீதமுள்ள பெரும்பாலானவர்கள் அரசின் வேலையை எளிதாக்கி அரசுக்கு உதவுகிறார்கள்,” என்கிறார் சஃப்தார் அலி.

நீதியின் பெயரால் முஸ்லிம்களைத் தண்டிப்பதும், அதே நேரத்தில் எந்தக் கேள்விகளும் சட்ட விளைவுகளும் எழாமல் பார்த்துக்கொள்வதும் என அரசாங்கத்தின் பழிவாங்கும் நோக்கத்தை ஊடகங்கள் எளிதாக்கின. அரசுக்கு எதிராக இருந்தாலும், அதிக் அகமதுவின் சொந்த வீட்டைக்கூட சட்ட நடவடிக்கைகள் மற்றும் உரிய நடைமுறைகள் இல்லாமல் இடிக்க முடியாது. ஆனால், சஃப்தார் அலி உள்ளிட்ட முஸ்லிம்களுக்குச் சட்டம் ஒரு பாதுகாப்பாகச் செயல்படவில்லை. மாறாக, அது அரச பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் ஒரு கருவியாகவே செயல்பட்டது.

சஃப்தார் அலியின் மகன்கள், புல்டோசர் இடிப்பு உத்தரவு சம்பந்தமாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்தனர். பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. மாறாக, அவர்கள் சஃப்தார் அலிக்கு, “கமர் அப்பாஸ் உங்கள் வீட்டை இடிக்கும் அறிவிப்பைக் கோருகிறார்” என்று கடிதம் எழுதினர். அந்த வீடு சட்டப்பூர்வமாகக் கமர் அப்பாஸ் மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமானது என்பதுகூட PDA-வுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதுபற்றியெல்லாம் அவர்கள் கவலைப்பட்டதாகவும் அவர்களின் பதிலில் தெரியவில்லை. சஃப்தார் அலியின் குடும்பத்தினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இடிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இதுவரை ஒரு விசாரணை கூட நடக்கவில்லை. அவர்களின் மனு நீதித்துறையால் கண்டுகொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளது.

“இப்படி இருந்தால், எங்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்? எங்களுக்கு இழப்பீடு கிடைத்து, எங்கள் வீடு மீண்டும் கட்டப்பட்டு, எங்கள் வீட்டு வரைபடம் அங்கீகரிக்கப்பட்டால், ஒருவேளை அது ஓரளவு நீதியாக இருக்கலாம். ஆனால் என் குடும்பம் அனுபவித்த மன வேதனையை ஈடுசெய்ய எந்த வழியும் இல்லை,” என்றார் சஃப்தார் அலி.

வீடு இடிக்கப்பட்டதால், சஃப்தார் அலியும் அவரது குடும்பத்தினரும் – அவரது மகன்கள், மருமகள்கள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் – திடீரென வீடற்றவர்களாக மாறினர். அவர்கள் தற்காலிகமாக ஓர் உறவினர் வீட்டிற்குக் குடிபெயர்ந்தனர். ஆனால் அவர்களால் அங்கு நிரந்தரமாகத் தங்க முடியவில்லை. வாடகை வீடு தேடுவது மற்றொரு சோதனையாக அமைந்தது. இது உத்தரப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்த பல முஸ்லிம்கள் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்சினை. இறுதியில், அவர்கள் ஒரு வாடகை வீட்டைக் கண்டுபிடித்தனர். ஆனால் அது நிச்சயமாக அவர்களுடைய சொந்த வீடு இல்லை. அவரது ஒரு பேரக்குழந்தை தன் தந்தையிடம், “அப்பா, இப்போது நாம் எங்கே தங்குவது?” என்று கேட்டதைச் சஃப்தார் அலி கவலையுடன் நினைவு கூர்ந்தார்.

சஃப்தார் அலி, அந்தப் புதிய வீட்டில் சொந்த இடத்திற்கான உணர்வைப் பெறவில்லை. புதிதாகக் குடியேறிய வாடகை வீட்டைத் தன் வீடாக அவரால் உணர முடியவில்லை. அதனால், திருமணமான தனது மகளின் வீட்டிற்கு இரவுகளில் தூங்கச் சென்றுவிடுகிறார். அவரது வீட்டை இழந்தது அவருக்கு வெறுமனே பொருள் இழப்பு மட்டுமல்ல. அது அவரை நிலைகுலையச்செய்து, வாழ்விடத்திலிருந்து வேரோடு பிடுங்கி, அவரது எழுபது வயதில் மீண்டும் முதலில் இருந்து தொடங்கி மீண்டு வரவேண்டும் என்கிற பெரும் சுமையை அவர்மீது சுமத்தியிருப்பதாக உணர்ந்தார். “எங்கள் வீடு ஒரு வடுவாக மாறியது,” என்று அவர் கூறினார். வீடு இடிக்கப்பட்ட பின்னர், சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டன என்றும், அதைச் செய்தது பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்தவர்களா அல்லது இடிபாடுகளை அகற்றியவர்களா என்பது அவருக்குத் தெரியவில்லை.

போராட்டமே தேவைப்படாத ஒன்றிற்காகப் போராடி ஓய்ந்த ஒரு மனிதனின் சோர்வை சஃப்தார் அலியின் குரல் இப்போது வெளிப்படுத்துகிறது. ஆனால் இதில், அவர் தனியாக இல்லை. இதுபோன்ற இடிப்புகளுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட பலரைப் போலல்லாமல், அவரது உறவினர்கள் அவருடன் நின்றனர். “எங்கள் உறவினர்கள் எங்களுக்குத் துணையாக நின்றனர். அது எங்களுக்கு மிகுந்த நிம்மதியைக் கொடுத்தது” என்றார்.

இடிபாடுகளைச் சந்தித்த மற்றவர்களுக்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்று கேட்டபோது, “பொறுமையாக இருங்கள். இஸ்லாம் பொறுமையைக் கற்பிக்கிறது. பொறுமை மிகவும் முக்கியமானது,” என்றார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக இடம்பெயர்ந்து வாழ்ந்த பிறகு, அவரது குடும்பம் ஒரு முடிவுக்கு வந்தது. ஜூலை 2024-இல், அவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்குத் திரும்பினர். அவர்கள் இடிபாடுகளை அகற்றி, தற்காலிகச் சுவர்களைக் கட்டி, அதன்மேல் ஒரு கொட்டகை அமைத்தனர். அவர்களின் வீடு இன்னமும் இடிபாடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் அவர்களால் இனிமேல் வாடகை செலுத்த முடியாத சூழ்நிலை. அதுமட்டுமின்றி, தங்களுக்குச் சொந்தமான இருப்பிடத்திற்குத் திரும்பி வருவது ஒருவித ஆறுதலையும் தந்தது.

ஒருவேளை, தன் சொந்த இல்லத்தில் மட்டுமே ஒருவர் உணரக்கூடிய ஓர் அமைதி இருக்கிறது. ஒரு வீடு இல்லமாக மாற பல ஆண்டுகள் ஆகும்; அப்படி ஆனபின்பு, அதை விட்டு வெளியேறுவது சாத்தியமற்றது. சஃப்தார் அலி அந்த வீட்டை விட்டு வெளியேறவில்லை. ஒருவேளை அவரால் முடியவில்லை. ஒருவேளை யாராலும் உண்மையில் அதை விட்டுச் செல்ல முடியாது; அது அவர்களுடைய சொந்த விருப்பத்தின்படி நிகழ்ந்தாலன்றி – அது அவர்கள் மீது திணிக்கப்படும்போது நிச்சயமாக வெளியேற முடியாது.

தமிழில்: மணிபிரகாஷ்

This piece has been translated by Prof. Mani Prakash. Read the original in English here.

Join us