
இந்தியத் தலைநகருக்கு அருகில் ஒரு கிராமத்தில், ஓர் இஸ்லாமியரின் வீடு புல்டோசரால் தகர்க்கப்பட்டது எப்படி?

இந்த சட்ட விரோத இடிப்பிற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன: பழிவாங்குவது மற்றும் எச்சரிக்கை விடுப்பது. இது இஸ்லாமிய சமூகத்தினரை ஒன்று சேர விடாமலும், பேச விடாமலும், போராட விடாமலும், எல்லாவற்றுக்கும் மேலாக, மற்றவர்களின் கண்களுக்குத் தெரிவது போல இயல்பாக வாழ அனுமதி இல்லாமலும் அம்மக்களை வைத்திருப்பதற்கான எச்சரிக்கையே இது. ஓவியம்: தி போலிஸ் ப்ராஜெக்ட்.)
பல ஆண்டுகால உழைப்பில் உருவான ஒரு வீடு
ஆஸ் முகமது என்பவர் வட இந்திய மாநிலமான ஹரியானாவின் நல்ஹர் கிராமத்தில் வசித்து வருபவர். 58 வயதான அவர், ஒரு தனியார் பாதுகாப்புப் பணியில் வேலைசெய்து வந்தவர். 1987-ல் சொந்தமாகவும் சுயமாகவும் கட்டிய வீட்டில் பல தசாப்தங்களாக வசித்து வந்தார். பதினைந்துக்கு பதினைந்து அடிக்கு மேல் இல்லாத அந்த வீடு, பல ஆண்டுகால கண்ணியமான உழைப்புக்கு ஒரு எளிமையும் உறுதியும் மிக்க ச்சான்றாக இருந்தது. அதில் அவரது வயதான தாய், மனைவி, நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் வாழ்ந்து வந்தனர். 2009-ல் காலமான அவரது தந்தையும் இதே வீட்டில்தான் வாழ்ந்தார். அந்த குடும்பமும் அவர்கள்து வீடும் மிகவும் எளிமையாக இருந்தாலும், அவர்கள் அமைதியும் பாதுகாப்பும் நிலையான தன்மையும் கொண்ட ஒரு வாழ்க்கையை அமைத்து வாழ்ந்துவந்தார்கள். ஒவ்வொரு காலையும், அருகிலுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முகமது வேலைக்குச் செல்வார். அந்த வளாகத்தின் வாயிலுக்கு வெளியே, அவரது மகன்கள் ஒரு தேநீர்க் கடையை நடத்தி வந்தனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, சிறிய அளவிலான வருமானமாக இருந்தபோதிலும், ஒப்பீட்டளவில் வசதியாகவும் செழிப்பாகவும் வாழ்ந்து வந்தது அக்குடும்பம்.
வன்முறைக்கு வித்திட்ட ஊர்வலம்
ஜூலை 31, 2023 அன்று, நல்ஹர் கிராமம் அமைந்துள்ள நூஹ் மாவட்டம் வழியாக பிரஜ்மண்டல் ஜலாபிஷேக் என்கிற பெயரிலான ஒரு யாத்திரை சென்றது. இந்த யாத்திரை, 2020 முதல் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தால் (VHP) தொடங்கப்பட்ட ஒரு வருடாந்திர இந்து மத ஊர்வலமாகும். மாநிலத்தின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்தில் (இங்கு 79 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள்) ‘புனித இந்து தளங்களை மீட்டெடுக்க’ இந்த யாத்திரை நடத்தப்பட்டது. வன்முறை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டிய போதிலும், இந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. VHP மற்றும் பஜ்ரங் தள் (மற்றொரு தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பு) உறுப்பினர்களின் தலைமையில், ஆயுதங்களை ஏந்தியும், வெறுப்பை விதைக்கும் முழக்கங்களை எழுப்பியும் ஊர்வலம் நடைபெற்றது.
இது மத நம்பிக்கையைக் கொண்டாடும் நிகழ்வல்ல. இந்த மாதிரியான நிகழ்வுகள் இப்போது தொடர்ந்து நிறைய நடந்துகொண்டே இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இது இந்துக்களின் வலிமையைக் காட்டி, சிறுபான்மை சமூகங்களை, குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தவும், தூண்டிவிடவும் வடிவமைக்கப்பட்ட நிகழ்வாகும். பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பசுப் பாதுகாவலராக அறியப்படும் மோனு மனேசர், முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகளிலும் கடத்தல் மற்றும் கொலைகளிலும் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர். அவரும் இந்த யாத்திரையில் பங்கேற்கப் போவதாக அறிவித்தது, பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
பரவிய கலவரமும், கொல்லப்பட்ட இமாமும்
உள்ளூர் முஸ்லிம்கள் சிலர் இந்த யாத்திரை மீது கல்வீசித் தாக்கியதாகப் பரவிய செய்தியைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மோதல்கள் வெடித்தன என்று பின்னர் வெளியான உண்மையறியும் குழு அறிக்கைகள் தெரிவித்தன. குருகிராம் மற்றும் சோஹ்னா உள்ளிட்ட அண்டை பகுதிகளுக்கும் வன்முறை வேகமாகப் பரவியது. இந்தியாவின் முக்கிய வணிக மையங்களில் ஒன்றாகவும், தேசிய முதலீட்டுப் பகுதி என்றும் அறியப்படுகிற ஒரு பகுதியான குருகிராமில், ஒரு கும்பல் அஞ்சுமன் ஜாமா மஸ்ஜித்தைத் தாக்கியது. அதில், அந்த மசூதியின் துணை இமாமான 19 வயது முகமது சாத் கொல்லப்பட்டார்.
இப்பகுதியில் வன்முறையும் பல தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றதாக சொல்லப்படுகின்றன. நல்ஹர் கிராமம் நேரடியாக பாதிக்கப்படாமல் இருந்தபோதிலும், வன்முறையில் இருந்து அந்த கிராம முஸ்லிம் மக்கள் தப்பவில்லை. அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததோடு, இணைய சேவைகளை முடக்கினர், மேலும் கலவரக்காரர்கள் என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக, முக்கியமாக முஸ்லிம்களின் சொத்துக்களைக் குறிவைத்து மாவட்டம் தழுவிய இடிப்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.
முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்ட வீடு
ஆகஸ்ட் 4-ம் தேதி, முகமது வேலையில் இருந்தபோது, அவரது மகன்களில் ஒருவரிடமிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. புல்டோசர்களும் காவல்துறையினரும் கிராமத்திற்குள் நுழைந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனே அவர் கிராமத்திற்கு விரைந்தார். ஆனால், அவர் வந்து சேர்வதற்குள், பல்லாண்டு கால உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்ட அவரது வீடு இடிக்கப்பட்டிருந்தது. இடிப்பு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கதவில் ஒட்டப்பட்ட ஒரு காகிதத் துண்டறிக்கையைத் தவிர, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து குடும்பத்திற்கு எந்தவித முன் அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
“எந்தவித முன்னறிவிப்போ, விசாரணையோ நடைபெறவில்லை. மேல்முறையீடு செய்யவோப திலளிக்கவோ கூட எந்த வாய்ப்பும் தரப்படவில்லை” என்று முகமது கூறினார். அரை மணி நேரத்திற்குள், அந்த வீடு முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அதே போல, முகமதுவின் மகன்கள் நடத்திவந்த தேநீர்க் கடையும் இடிக்கப்பட்டது. அதனுடன், குடும்பத்தின் வாழ்வாதாரம் பறிபோனது. ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கும் நேரத்திற்குள், நாற்பதாண்டுகளாக அந்த குடும்பம் கட்டியெழுப்பிய அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டது.
அரசின் விளக்கமும், புறக்கணிக்கப்பட்ட ஆதாரங்களும்
மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை “சட்டவிரோதக் கட்டிடங்களை” அகற்றும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு இயல்பான ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதி எனவும், அக்கட்டிடங்கள் வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புடையவை என்றும் குற்றம் சாட்டியது. பின் தேதியிட்டு, இடிப்புக்கு சற்றுமுன்னர் கொண்டுவந்து ஒட்டப்பட்ட அறிவிப்பு அறிக்கையில், கட்டுமான விதிகளை அந்தக் கட்டிடம் மீறியதாகவும், அதனால் அக்கட்டிடம் உடனடியாக அகற்றப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், முகமதுவின் வீட்டிற்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான கட்டணங்களையும் அவர்கள் தொடர்ந்து செலுத்தி வந்திருக்கின்றனர். அவர்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற அனைத்தும் அதே முகவரியைக் கொண்டிருந்தன. “நாங்கள் ஒருபோதும் காவல் நிலையத்திற்கோ அல்லது அரசு அலுவலகத்திற்கோ செல்ல வேண்டியது கூட இருந்திருக்கவில்லை” என்று முகமது கூறினார்.
முகமதுவின் குடும்பம் மட்டுமல்லாமல், அரசின் இந்த சட்ட விரோத புல்டோசர் இடிப்பால் ஏராளமான பல குடும்பங்களும் சொந்த நாட்டிலேயே வீடற்றவர்களாக மாறியிருக்கின்றனர். வன்முறையைத் தொடர்ந்து நூஹ் மாவட்டம் முழுவதும் அதிக அளவிலான இடிப்பு நடவடிக்கைகளை அரசு தொடங்கியது. ஐந்து நாட்களில், நல்ஹர், புன்ஹானா, தௌரு மற்றும் நஜினா போன்ற நகரங்கள் மற்றும் கிராமங்கள் உட்பட, 37 இடங்களில் 71.1 ஏக்கர் பரப்பளவில் 1,200-க்கும் மேற்பட்ட வீடுகளும், வணிகக் கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. இவற்றில் மிகப்பெரும்பான்மையானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை.
இந்தச் கட்டடங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்தோ அல்லது முறையான அனுமதி இல்லாமலோ கட்டப்பட்டவை என்றும், “சமூக விரோத நடவடிக்கைகளுக்கு” பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் காவல்துறை கூறியது. இருப்பினும், இடிக்கப்பட்ட பல கட்டிடங்களுக்கு முறையான பட்டா இருந்ததாகவும், அவை தடைசெய்யப்பட்ட காட்டுப்பகுதியிலோ அல்லது அரசு நிலத்திலோ கட்டப்படவில்லை என்றும் ஆவணங்கள் சுட்டிக்காட்டின.
நீதிமன்றத் தலையீடும், தொடர்ந்த துயரமும்
நூஹ் மாவட்டத்தில் உள்ள பல குடியிருப்பாளர்களுக்கும், புல்டோசர் இடிப்பு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், அதனால் பதிலளிக்கவோ அல்லது தங்கள் உடைமைகளை பாதுகாக்கவோ கூட நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறினர். (இடிப்புகளுக்கான உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, இடிப்பதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்.) ஆகஸ்ட் 7 அன்று, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தலையிட்டு, இடிப்பு நடவடிக்கையை நிறுத்தியதுடன், நூஹ்வில் நடப்பது ‘ஓர் இன ஒழிப்பு நடவடிக்கையா?’ என்றும் கேள்வி எழுப்பியது.
இடிப்பு அறிவிப்புகள் வழங்குவது உள்ளிட்ட முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாததையும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும், “சட்டம் மற்றும் ஒழுங்கின் பெயரால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சொத்துக்கள் குறிவைக்கப்படுகின்றனவா?” என்றும் கேள்வி எழுப்பியது. நீதிமன்றத்தின் தலையீடு இந்த மீறலின் தீவிரத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தது, ஆனால் முகமது போன்ற குடும்பங்களுக்கு, சேதம் ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டது. அவர்கள் இழந்த வீட்டை எந்த நீதிமன்ற உத்தரவும் மீண்டும் கட்டிக் கொடுக்கவில்லை, இந்த இடிப்புகளுக்கெல்லாம் முன்னர், அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் அவர்களுக்கு இருந்த இயல்பான பாதுகாப்பையும் யாரும் திருப்பித் தரவில்லை. இவ்வளவு நடந்தபிற்கும், அந்தக் குடும்பத்தின் துன்பங்கள் எல்லாம் அப்போதுதான் தொடங்கியிருந்தன.
அதிர்ச்சியில் உறைந்துபோன முகமதுவின் மகன்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையேற்பட்டது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களோ, இடிபாடுகளுக்கு அருகில் ஒரு தார்ப்பாய் விரித்து அதன் கீழ் தஞ்சம் புகுந்தனர். மின்சாரம், குடிநீர், பாதுகாப்பு, தனிமை என எதுவும் இன்றி, தங்கள் வாழ்க்கையின் சிதைவுகள் கண் முன்னே இருக்க, அவர்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இந்த நிலையில் அந்த குடும்பம் வாழ்ந்தது. செங்கற்களையும், உடைந்த ஓடுகளையும், தன் குடும்பத்தின் கடந்த காலத்தின் கடைசித் துண்டுகளையும் சேகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
“நாங்கள் செய்த தவறுதான் என்ன? நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதுதானா?” என்று அவர் கேட்டார்.
கூட்டுத் தண்டனையும், ஊடகங்களின் துரோகமும்
எந்தவித விசாரணையோ சரிபார்ப்போ இல்லாமல், அதிவேகமாக இடிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் நாம் அடிக்கடி கேள்விப்படுகிற ஒரு பழக்கப்பட்ட வடிவத்தையே இந்த புல்டோசர் இடிப்பும் கொண்டிருக்கிறது. இது சட்டம் மற்றும் ஒழுங்குடன் சிறிதும் தொடர்பில்லாதது. மாறாக, இப்போது பொதுவெளியில் வழக்கமாகத் தூற்றப்படும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் ஒரு கூட்டுத் தண்டனையாகவே இது பார்க்கப்படுகிறது. 2014-ல் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்த சமூகத்திற்கான குடியுரிமையின் அடித்தளங்கள் வியத்தகு முறையில் நிலையற்றதாகிவிட்டன. அரசின் கொள்கைகள், கலாச்சாரத் தாக்குதல்கள் மற்றும் வெளிப்படையான வன்முறைகள் மூலம் தீவிரமான ஓரங்கட்டப்படுதலும் அதிகரித்துள்ளது.
மைல்ஸ்2ஸ்மைல் (Miles2Smile) என்ற இலாப நோக்கற்ற நிவாரண மற்றும் கல்வி அமைப்பு, அவர்களின் மருத்துவச் செலவுகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய நிதியுதவி வழங்கும் வரை முகமதுவுக்கும் அவரது குடும்பத்துக்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அந்த அமைப்பு மேலும் சில நிதிகளைத் திரட்டி, முகமது ஒரு சிறிய அறையை மட்டும் கொண்ட ஒரு தங்குமிடத்தைக் கட்ட உதவியது. இது இழந்த வீட்டிற்கு மாற்றாக இருக்காது, ஆனால் குறைந்தபட்சம் ஒரு கூரையையும், சில கண்ணியமான தனிமையையும் தந்தது என்று அவர் கூறினார்.
முகமது தனது வீட்டை இழந்ததால் மனமுடைந்து போனது மட்டுமல்லாமல், செய்தி ஊடகங்களால் தவறானவர்களாக சித்தரிக்கப்படுவதைக் கண்டு ஏமாற்றமடைந்தார். “நேரில் அவர்கள் எங்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்கள்” என்று அவர் நினைவு கூர்ந்தார். “ஆனால் அவர்கள் ஊடகங்களில் எழுதும் செய்திகளிலோ, எங்கள் வீடுகள் இடிக்கப்படத் தகுதியானவர்கள் என்றும், நாங்கள் அமைதியைக் குலைக்கும் கலவரக்காரர்கள் என்றும் சித்தரித்தார்கள்”. இப்படியான துரோகத்தைப் பார்த்ததில் இருந்து, பத்திரிகையாளர்களிடம் பேசுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று நினைத்தார். அவரது பார்வையிலும், தங்கள் வீடுகளை இழந்த பலரின் பார்வையிலும், ஊடகங்கள் உண்மையைச் சொல்லத் தவறியது மட்டுமல்ல, அதைத் தீவிரமாகத் திரித்துக்கூறின.
“நாங்கள் சொல்லிய அனைத்தையுமே, அவர்கள் எல்லாவற்றையும் திரித்துதான் காட்டினார்கள்” என்றார்.
அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவதற்குப் பதிலாக, அரசு சொல்லும் கதைகளை அப்படியே உள்வாங்கி, அதனை ஊதிப்பெருதாக்கி, புல்டோசர் இடிப்புகளைக் குற்றவாளிகளுக்கு எதிரான அவசியமான நடவடிக்கை என்று சித்தரிக்கின்றன. அது சட்டத்தின் சோதனையில் நிற்காது என்பதைப் பொருட்படுத்தவில்லை. காலப்போக்கில், இது முழு சமூகங்களின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தி, அவர்களை குடிமக்களாகக் கூட பார்க்க மறுத்து, இந்த வன்முறையை இயல்பாக்கியுள்ளது.
புல்டோசர் நீதி: ஒரு அச்சுறுத்தல் கருவி
எனவே, முகமதுவின் கதை, அல்லது நூஹ்வின் கதை, இந்தியாவில் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. விசாரணைகளைத் தவிர்த்து, நீதிமன்றங்களை ஒதுக்கி, தனிநபர்களுக்குப் பதிலாக வீடுகளைக் குறிவைத்து, ஆதாரங்களைச் சாராமல், காட்சிப்படுத்துதலை மட்டுமே நம்பியிருக்கும் “புல்டோசர் நீதி” என்ற சட்டவிரோத தண்டனையின் வடிவத்திற்கு முஸ்லிம்கள் பலியாகிய பல கதைகளில் இதுவும் ஒன்று. இந்த புல்டோசர் இடிப்புகள், சில உயிர்கள் மதிப்பற்றவையாக பார்க்கப்படுகின்றன என்பதைப் புரியவைக்கிறது. அவர்களின் குடியுரிமைக்கான கோரிக்கைகள் நிலையற்றதாக மாற்றப்படுகின்றன, மற்றும் அவர்களின் தங்குமிட உரிமை அரசியல் மௌனத்தைச் சார்ந்தது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. முகமது என்ன செய்தார் என்பதற்காக, அவர் கட்டிய வீடு இடிக்கப்படவில்லை. மாறாக, அவர் யாராக இருந்தார், எங்கே வாழ்ந்தார், அவருடைய பெயர் எப்படி ஒலித்தது என்பதற்காக இடிக்கப்பட்டது.
இந்த அழிவு இரண்டு நோக்கங்களைக் கொண்டது: பழிவாங்கும் செயல் மற்றும் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. இது இஸ்லாமிய சமூகத்தினரை ஒன்று சேர வேண்டாம், பேச வேண்டாம், போராட வேண்டாம், எல்லாவற்றுக்கும் மேலாக, வெளிப்படையாக வாழ்வதற்கே இடமில்லை என்று எச்சரிக்கிறது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அல்லது முற்றிலும் விலகி இருப்பது போதாது. அரசு ஒருவரின் அடையாளத்தைத் தண்டிக்கத் தீர்மானித்துவிட்டால், நடுநிலைமை மக்களைப் பாதுகாக்காது.
நல்ஹருக்குள் வந்த புல்டோசர்கள் நீதிமன்ற உத்தரவுகளுடனோ அல்லது சட்ட ஆவணங்களுடனோ வரவில்லை. அவை, மக்கள் மீதான அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக புல்டோசர் இடிப்புகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்திவரும் அரசியல் தலைவர்களின் ஆதரவுடன் வந்தன. அவை கேமராக்களுடன், அதிகாரிகளுடன், எந்த விளக்கத்திற்கும் இடமளிக்காமல், எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தவித தண்டனைப் பயமும் இன்றி வந்தன.
உடைந்த நம்பிக்கையும், பதிலற்ற கேள்விகளும்
எந்தவித அறிவிப்போ, விசாரணையோ, ஆதாரமோ இல்லாமல், அரசால் வீடுகளை இடிக்க முடியுமானால், சட்டத்திற்கும் அதனை அமலாக்கும் நடைமுறைக்கும் என்ன பொருள் இருக்கிறது இங்கே? விசாரணை கூட செய்யப்படாமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் தண்டனை வழங்க முடியுமானால், ஜனநாயகத்தில் என்ன மிச்சமிருக்கிறது? முகமது எழுப்பும் கேள்விகள், நூஹ்வின் இடிக்கப்பட்ட சுற்றுப்புறங்களில் மட்டுமல்ல, இப்பகுதியில் உள்ள அனைத்து அகதிகள் முகாம்களிலும், அதற்கு அப்பால் உள்ள நீதிமன்ற அறைகளிலும் எதிரொலிக்கின்றன.
ஆனால் மீண்டு வருவதற்கான பாதை நீண்டதாகவும், நிச்சயமற்றதாகவும் இருக்கிறது. தனது வீட்டை இழந்த வலி என்பது வெறுமனே பொருள் இழப்பு மட்டுமல்ல. அது உணர்ச்சிபூர்வமான, உளவியல் மற்றும் தலைமுறை இழப்பு. அது சுவர்களை மட்டுமல்ல, நம்பிக்கையையும் சேர்த்தே உடைத்துவிட்டுச் சென்றிருக்கிறது. அரசு உங்களுக்கு எதிராகத் திரும்பும்போது, நேர்மையும், எந்தத் தவறையும் செய்யாத உங்கள் அப்பாவித்தனமும் மட்டுமே உங்களைக் காப்பாற்றிவிடாது என்பதை இந்த நிகழ்வுகள் அவருக்கு உணர்த்தியிருக்கிறது. அவரது குரல், சோர்வடைந்திருந்தாலும், தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கான பதிலைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
தமிழில்: நீலாம்பரன்
This piece was translated from English to Tamil by Neelambaran as part of The Polis Project‘s collaboration with maattru.in. Read the original story here.