

வெளிப்படையாக பெயரைக் குறிப்பிடமுடியாத பரபரப்பான ஒரு நகரில், ஒரு மதியப் பொழுதில், ஒரு இளம்பெண் அவரது வீட்டின் இடிபாடுகளுக்கு அழைத்துச் சென்றார். அவர் வெகு தொலைவில் நின்று, கைகாட்டி, “என் வீடு இங்கேதான் இருந்தது” என்று சொன்னார். பிறகு, அவர் அமைதியாகிவிட்டார். அவர் குரல் உடையவில்லை; உடல் நடுங்கவில்லை. அசைவற்று நின்றிருந்தார், அவ்வளவுதான். பிறகு அவர், “நாங்கள் ஏற்கெனவே அதை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டோம்,” என்று சொன்னார். அவரது கண்கள் இன்னும் தரையையே பார்த்துக்கொண்டிருந்தன. “இப்போது யாரிடமும் எதுவும் சொல்லிப் பயனில்லை” என்று அவர் சொல்லும்போது அதில் ஒரு விரக்தி தெரிந்தது.
மௌனத்தின் ஆழம்
புல்டோசர் இடிப்புத் திட்டம் தொடர்பான ஆவணப் பணிகளின்போது, இத்தகைய ஆழ்ந்த மௌனத்தைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். இந்தியா முழுவதும் நீதிக்கு அப்பாற்பட்ட, தண்டனை தரும் நோக்குடன் செய்யப்படும் இது போன்ற வீடுகளை இடிக்கும் நடவடிக்கைகளை நாங்கள் ஆவணப்படுத்தி வருகிறோம். எங்கள் தொகுப்பில் பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் மட்டுமல்ல; பதிவுசெய்யப்பட்ட தகவல்களைச் சுற்றி நிலவும் ஆழமான மொளனங்களும் முக்கியமான அடையாளமாக இருக்கின்றன. மக்கள் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அல்லது ‘யாரிடமும் பகிர்ந்து விடாதீர்கள்’ என்று எங்களிடம் கேட்டுக்கொண்ட கதைகள். இந்த மௌனங்கள் எல்லாமே ஆய்வுகளில் குறிப்பிடப்படாமல் விடப்பட்ட இடைவெளி மட்டுமல்ல; அவை வன்முறையின் விளைவுகள். அரசின் கைகளினால் தங்கள் வீடுகளை இழந்த பிறகு ஏற்படும் பயம், சோர்வு, நம்பிக்கையின்மை போன்ற உணர்வுகளை இந்த மௌனம் வெளிப்படுத்துகிறது.
இந்த வேலையை நாங்கள் ஆரம்பித்தபோது, இந்தியாவில் முஸ்லிம் மக்களின் மீது குறிவைத்து அதிகமாக நடத்தப்பட்டு வரும் இடிப்பு நடவடிக்கைகளை ஆவணப்படுத்தி, அவற்றுக்குச் சாட்சியமளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. ஆனால், திட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே ஒன்று தெளிவானது: காட்சி ஆதாரங்களைத் திரட்டுவதும், சட்ட வழிகளைப் பின்பற்றுவதும் முக்கியம்தான். இருப்பினும், அந்தப் பணியில் மிக நுட்பமான, அத்தியாவசியமான ஏதோவொன்று வேறு எங்கோ இருந்தது. அதுதான் நம்பிக்கையை வளர்ப்பது, அவர்களது குரலை உன்னிப்பாகக் கேட்பது, மற்றும் அவர்களின் மறுப்பையும் மதிப்பதுமாகும். தங்கள் வீடுகள் சிதைந்து போனதைக் கண்ட பல குடும்பங்கள் பேச விரும்பவில்லை. இது அலட்சியத்தால் அல்ல, மாறாக பயத்தாலோ, விரக்தியாலோ, அல்லது இரண்டினாலுமோ ஏற்பட்டது. இந்தச் சூழலில், அந்த மறுப்பை ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் பொறுமையாக இருப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான், அரச வன்முறையின் தன்மை, துயரத்தின் தாக்கம், உங்களை நீதி பெறத் தகுதியற்றவர்கள் என முத்திரை குத்திவிட்ட சமூக அமைப்பில் நீதியைத் தேடுவது எவ்வளவு சாத்தியமற்றது என்பதை இந்த மௌனம் நமக்கு உணர்த்துகிறது.
“தயவுசெய்து எங்கள் வழக்கைப் பாதிக்கக்கூடிய எதையும் எழுதாதீர்கள்”
நாங்கள் சந்தித்துப் பேசிய ஒரு குடும்பத்தினர், தங்கள் வீடு இடிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். பல வாரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் எங்களுடன் பேச ஒப்புக்கொண்டனர். ஒரு உறவினரின் அலைபேசி வழியாகப் பல மணிநேரம் நடந்த உரையாடலில், அந்தக் குடும்பத்தினர் நடந்த சம்பவங்களைக் கவனமாக, சட்டப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி விவரித்தனர். “தயவுசெய்து எங்கள் வழக்கைப் பாதிக்கக்கூடிய எதையும் எழுதிவிடாதீர்கள்” என்று அந்தக் குடும்பத்தின் தந்தை திரும்பத் திரும்ப எங்களிடம் கேட்டுக்கொண்டார். அலைபேசியைத் திரும்பக் கொடுத்தபோது, அந்த உறவினர் கேட்டார், “உங்களுக்குத் தெரியுமா? எது எங்களுக்கு உதவும், எது எங்களைக் காயப்படுத்தும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. உண்மை பலமுறை திரிக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். நாங்கள் எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும்” என்றார்.
அவர்கள் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. உண்மை கூட ஆபத்தாக மாறிவிடக்கூடிய ஒரு சூழலில், பேசுவது ஆபத்தான செயல்தான். பெரும்பாலும், அரசு தனது இடிப்பு நடவடிக்கைகளை நிர்வாக ரீதியிலான நடைமுறை என்றும், நகர்ப்புறங்களைப் புதுப்பிக்கும் திட்டத்தின் ஒரு பகுதி என்றும், அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்றும் சித்தரிக்கிறது. இந்த இடிப்புகளை அத்துமீறல்களாகப் பார்க்காமல், சரியான நடவடிக்கை எனக் காட்டுவதில் ஊடகங்களும் துணைபோகின்றன. இத்தகைய சூழலில், ஆவணப்படுத்தும் நடைமுறைகூட அபாயகரமானதாகி விடுகிறது; ஒற்றுமையாக இருப்பதும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படுகிறது.
சில இடங்களில், மௌனத்திற்குக் காரணம் மிக மோசமான பயம்தான். ஒரு குடும்பத்தினர், எதைப்பற்றியும் பேசக் கூடாதென உள்ளூர் அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டதாகக் கூறினர். மற்றொரு சம்பவத்தில், எங்களை ஒரு முறை சந்தித்த பிறகு, அந்தக் குடும்பத்திற்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது; அதில் “பிரச்சனையை வரவழைத்துக்கொள்ள வேண்டாம்” என்று அவர்கள் அச்சுறுத்தப்பட்டனர். அந்த மிரட்டலுக்குப் பிறகு நாங்கள் சென்றபோது, அக்குடும்பம் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டது. “எங்களுக்குப் புதிய பிரச்சனையே வேண்டாம்” என்று அந்தக் குடும்பத்தினர் கூறிவிட்டதாக அவர்கள் சார்பாக அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் எங்களுக்குச் சொன்னார். பாதிக்கப்பட்டவர்கள் மீதான இந்தத் தொடர்ச்சியான கண்காணிப்பும், பழிவாங்கல் நடவடிக்கைகளும் எங்கள் ஆவணப் பணிக்கு ஒரு பெரும் தடையாக உள்ளன. இது போன்ற விசயங்களை அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லும் உளவாளிகள் போன்ற ஆட்காட்டிகள் சாதாரணமாக நடமாடும் கிராமங்களிலும் நகரங்களிலும், வெளியாட்களிடம் பேசுவது கூட ஆபத்தானது. சில குடும்பங்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு ஒரே ஒரு வழிதான்: அவர்கள் எதுவுமே பேசாமல் தங்கள் துன்பங்களை வெளியில் சொல்லாமல் மௌனமாக இருப்பதே அவர்களுக்குப் பாதுகாப்பானது.
“எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்; பேசி என்ன பிரயோஜனம்?”
“எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்” – மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் இப்படிச் சொன்னார். ஒரு மதக் கலவரத்திற்குப் பிறகு, அவரது வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் குறிவைக்கப்பட்ட பிறகு, அவரது வீடு முற்றிலுமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது?” – இது வெறும் விரக்தியால் வந்த கேள்வி மட்டுமல்ல. மாதக்கணக்கில் காவல் நிலையங்கள், வழக்கறிஞர் அலுவலகங்கள், நகராட்சி ஆவணங்கள், வாடகை வீடுகள் என அலைந்த ஒருவரின் குரல் அது. அவர் பத்திரிகையாளர்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் பேசினார், பேசினார், பேசினார்; எதுவுமே மாறவில்லை. புல்டோசர்கள் தங்கள் வேலையைச் செவ்வனே செய்தன. அரசு வென்றது. இப்போது மீண்டும் அதைப் பற்றிப் பேசுவது வெறும் அர்த்தமற்ற செயல் என்று அவருக்குத் தோன்றியது.
இந்த உணர்வு திரும்பத் திரும்ப வெளிப்பட்டுள்ளது. வீடு இடிக்கப்பட்ட பிறகு, அந்தப் பிரச்சனை பரவலாகப் பேசப்பட்ட பிறகும், மக்களின் ஆவேசம் தணிந்த பிறகும், குடும்பங்களுக்குக் கிடைத்தது நீதி அல்ல. மாறாக, நீண்டகாலச் சுமையைச் சுமக்க வேண்டியதே மிஞ்சியது. சிலரால் எப்படியோ வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்தது. பெரும்பாலானோர்க்கு அது சாத்தியப்படவில்லை. சிலர் இன்னும் சட்டப் போராட்டத்தில் தான் உள்ளனர். மற்றவர்கள், தொடர்ந்து போராட முடியாமல் மிகவும் சோர்வடைந்து, கைவிட்டுவிட்டனர். மௌனம் என்பது எதிர்ப்பைக் காட்டமுடியாத குறைபாட்டின் வெளிப்பாடு அல்ல. அது வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு புதிய உத்தி. ஒரு குடும்பத்தின் உறுப்பினர் என்னிடம் சொன்னார், “நாங்கள் இப்போது யாரிடமும் பேசுவதில்லை. ஏனென்றால், இனிமேலும் எங்களால் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாது.”
“எங்கள் குறைகளைக் கடவுளிடம் சொல்லிவிட்டோம்”
பல குடும்பங்களுக்கு, சரணடைவது என்பது வெறும் உணர்வுபூர்வமான செயலாக மட்டுமல்ல, அது ஆன்மிக ரீதியிலானதும் கூட. உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்மணியைப் பேட்டி எடுக்கச் சென்றபோது, மென்மையாகவும் உறுதியாகவும் சொன்னார் – “நாங்கள் எங்கள் குறைகளைக் கடவுளிடம் சொல்லிவிட்டோம். அவர் நீதி வழங்குவார். நாங்கள் இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை” அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை, பத்திரிகையாளர்களிடமோ, எங்களிடமோ பேசுவது என்பது இறைவன் வழங்கப்போகும் நீதியின் மீது சந்தேகப்படுவதாகும். தெய்வத்திடம் ஏற்கெனவே நீதி கேட்கப்பட்டுவிட்ட நிலையில், இவ்வுலகத்தால் என்ன கொடுக்க முடியும்?
மதச்சார்பற்ற கருத்துருக்களில் பெரும்பாலும் புரிந்துகொள்ளத் தவறும் ஒரு மொழியும் இங்கு உள்ளது. அதாவது, பேச மறுப்பது என்பது வெறும் மௌனம் மட்டுமல்ல; அது அரசாங்கத்தை விட உயர்ந்த ஒரு நீதிமன்றத்திடம் சரணடைவது போன்றதாகும். சில சமயங்களில், தங்களுக்கு அநீதி இழைத்த சட்ட அமைப்புக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்க மறுப்பதுமாகும்.
ஒருவரிடம், அவரது பாதிப்புக் கதையைச் சொல்ல முன்வருவாரா என்று மெதுவாகக் கேட்டபோது, “நீதிமன்றங்களே தங்கள் சட்டங்களைப் பின்பற்றாதபோது, நாம் யார் அதைப்பற்றி வாதாடுவதற்கு?” என அவர் கேட்டார்.
இந்த ஆன்மிகப் பார்வை ஒருவகையில் அதிகாரம் அளிக்கக்கூடியது. அது ஒருவிதமான நிறைவுணர்வை வழங்குகிறது. அதாவது, கையறு நிலையிலும் தங்களுடைய தன்மானத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒரு வழியாக அமைகிறது. ஆனால், இது சில சமயம், பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொதுத் தளத்திற்கும் இடையே இருக்கும் கடைசிக் கதவையும் மூடிவிடுவது போலச் செயல்படுகிறது.
“அதைப்பற்றிப் பேசுவது வலிகளை மீண்டும் அதிகரிக்கிறது”
வீட்டை இழக்கும் வலி வெறும் ஒரு சொத்தையோ பொருளையோ இழப்பது மட்டுமல்ல. அது மனரீதியாகவும், சமூக ரீதியாகவும், தலைமுறை ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த வன்முறை வீடுகளை இடிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. அவர்களுக்கு நேர்ந்ததை மீண்டும் மீண்டும் பேசுவது, அவர்களது மனக்காயங்களைக் கிளறி, மீண்டும் அவர்களை வேதனைப்படுத்தக்கூடும். நேர்காணல்களைத் தொடங்கிப் பிறகு பாதியிலேயே தங்கள் குரல் உடைந்துபோய் பேசுவதை நிறுத்தியவர்களும் உண்டு. மற்றவர்கள் தங்கள் அடையாளம் தெரியாமல் இருக்க (ரகசியம் காக்க) கேட்டுக்கொள்கிறார்கள்; தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க மட்டுமல்ல, தாங்கள் அதை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள விரும்பாததாலும்கூட. ஒரு தாய் கூறினார்: “நாங்கள் கடந்து வந்துவிட்டோம். அதைப்பற்றிப் பேசுவது எல்லாத் துன்பங்களையும் மீண்டும் கொண்டு வருகிறது.”
பிரயாக்ராஜில் நாங்கள் ஆவணப்படுத்திய தௌஹீத் ஃபாத்திமாவின் வழக்கில், அவர் தனது புதிய வீட்டிற்குச் செல்லவிருந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த வீடு சட்டவிரோதக் கட்டிடம் என்ற பெயரில் இடிக்கப்பட்டது. அவரது தந்தை ஜுனைத், மனதை உலுக்கும் வகையில் துல்லியமாக அரசின் ஒவ்வொரு விதிமீறலையும் விவரித்தார். ஆனால், தௌஹீத்தால் தனது உணர்வுகளை ஒருபோதும் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. அவரது இழப்பு வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்குப் பெரியதாக இருந்தது. “இது நடந்தது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை,” என்று அவர் எங்களிடம் சொன்னார். “இந்த வீட்டிற்காகத்தான் நாங்கள் இவ்வளவு காலம் காத்திருந்தோம். இப்போது நாங்கள் எதற்காகக் காத்திருந்தோமோ அது இல்லை.”
எங்களது ஆய்வுத் திட்டத்தின் மூலம், சாட்சியம் அளிப்பது என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை வெறுமனே பதிவு செய்வதைப் பற்றியது மட்டுமல்ல என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். அது சொல்ல முடியாதவற்றையும் உணர்வது, சொல்லாமல் விடப்பட வேண்டியவற்றை மதிப்பது, மற்றும் தீர்வு காண முடியாத துயரத்திற்கு ஓர் ஆறுதலான வெளியை உருவாக்குவது ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
இந்த மௌனத்திலும் சக்தி இருக்கிறது
தாராளவாத ஜனநாயகப் பேச்சுவழக்கில், மௌனம் என்பது பெரும்பாலும் கீழ்ப்படிதலுக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், வீடுகள் இடிக்கப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு, மௌனம் என்பது உயிர்வாழ்வதற்கான ஒரு உத்தியாக இருக்கலாம். அனைத்தும் பறிக்கப்பட்டிருக்கும்போது, குறைந்தபட்சக் கட்டுப்பாட்டையாவது தக்கவைத்துக்கொள்ளும் ஒரு வழி அது. இது சுயமரியாதையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்: அரசு தங்கள் வீடுகளைப் பறித்துக்கொண்டது, ஆனால் அவர்களின் வார்த்தைகளை அல்ல. இது தங்களை அழித்த ஒரு சமூக அமைப்பில் பங்கேற்பதை மறுப்பதாகும். ஒரு பெண் சொன்னார்: “அவர்கள் நாங்கள் கெஞ்ச வேண்டுமென நினைக்கிறார்கள். நாங்கள் அவர்களிடம் கருணைப் பிச்சை எடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், அப்படி ஒரு திருப்தியை நாங்கள் அவர்களுக்குத் தர மாட்டோம். நாங்கள் அமைதியாக இருப்போம். ஆனால், அந்த அமைதி எங்களுடையதாக இருக்கும்.”
ஆவணப்படுத்தலின் அறநெறிகள்
ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில், இந்தச் சூழலில் நாம் நமது பங்கைத் தொடர்ந்து கவனமாக அணுக வேண்டும். ஒருவரது வலியையும் மன அதிர்ச்சியையும் மீண்டும் கிளறுவதன் பொருள் என்ன? இதுபோன்ற பொதுப் பதிவிற்காக ஒருவரின் கதையை அறிய வேண்டும் என்ற ஆர்வத்திற்கும், அக்கறையுடன் கூடிய அறநெறிகளுக்கும் இடையே நாம் எப்படிச் சமநிலையைக் காண்பது? நாங்கள் சேகரிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கதைகளையும் வெளியிடுவதில்லை. சில நேரங்களில் நாங்கள் எதையுமே எழுதுவதில்லை. சில நேரங்களில், அந்தக் குடும்பத்தினர் வெளியிட வேண்டாம் என்று சொன்னால் அந்த ஒலிப்பதிவுகளை அழித்துவிடுகிறோம். நாங்கள் அவர்களது படங்களைக் கூட மங்கலாக்குகிறோம், பெயர்களை மாற்றி அவர்களது உண்மையான அடையாளம் பிறருக்குத் தெரியாதவாறு மாற்றுகிறோம். அவர்களின் சம்மதத்திற்காக மாதக்கணக்கில் கூட காத்திருக்கிறோம். இது போன்ற மோசமான சம்பவங்களில் உயிர் பிழைத்தவர்களுக்கு, தொடர்ந்து பேசுவது தங்களுக்குப் பாதுகாப்பற்றது எனத் தோன்றியதால், சில நேர்காணல்களைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளோம். இந்த முடிவுகள் வெறும் வழிமுறைகள் மட்டுமல்ல; கண்ணியத்தை அழித்துவிட்டு ஆவணப்படுத்தும் பணியைச் செய்யக்கூடாது என்ற நம்பிக்கையில் வேரூன்றிய கொள்கை ரீதியான தேர்வாகும். இதனால் சில கதைகள் ஒருபோதும் சொல்லப்படாமலேயே போய்விடக்கூடும் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பரவாயில்லை. எங்கள் ஆவணக் காப்பகம் வளரும்போது, அது எப்போதும் அந்தச் சொல்லப்படாத கதைகளில் நிறைந்திருக்கும் ஆழ்ந்த மௌனங்களையும் சுமந்து செல்லும். நாங்கள் அந்த மௌனங்களை நிரப்ப விரும்பவில்லை; நாங்கள் அவற்றை மதிக்க விரும்புகிறோம்.
அதே நேரத்தில், அந்த மௌனத்தைக் கொண்டாடுவதிலும் ஆபத்து உள்ளது. ஆவணப்படுத்தும் பணியில், நம்மிடம் தங்களுக்கு நடந்ததைச் சொல்ல மறுக்கும் அனைவரும் வலிமையின் வெளிப்பாடாக மட்டுமே மறுப்பதில்லை. சில மறுப்புகள் கட்டாயத்தின் பேரிலும் நிகழ்கின்றன. மனக்காயம் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டதால் வார்த்தைகள் மூச்சுத்திணறச் செய்கின்றன. சோர்வாலும், பயத்தாலும், நம்பிக்கையின்மையாலும் உருவாகின்றன. இந்த மௌனங்கள் எப்போதும் அவர்களாகவே தேடிக்கொள்வதல்ல; அவை கட்டாயத்தின் பேரில் அவர்கள் மீது திணிக்கப்பட்டவை. ஆனால், அவற்றை நாம் புரிந்துகொள்வது என்பது, அந்த மௌனத்தை மீறுவதாக அர்த்தமல்ல. உயிர் பிழைத்தவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்காவிட்டால், எங்கள் பணி நிறைவேறியிருக்காது. நாங்கள் மிகுந்த கவனத்துடனும், பாதிக்கப்பட்ட மக்களின் சம்மதத்துடனும், அவர்களது கதைகளைக் கண்ணியத்துடன் ஆவணப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.
ஒரு அரசாங்கம் ஒருவரது வீட்டை இடிக்கும்போது, அது ஒரு தெளிவான செய்தியை விடுக்கிறது: “நீங்கள் இங்கு வாழத் தகுதியற்றவர்கள்; உங்கள் குரல் கேட்கப்படாது.” எங்களுடைய ஆவணப்படுத்தும் பணி, அரசாங்கத்தின் அந்தச் செய்திக்கு எதிராக நிற்பதில்தான் உள்ளது. ஆனால், அந்த எதிர்ப்பு எப்போதும் சத்தமானதாக இருக்கத் தேவையில்லை. சில நேரங்களில், மௌனமாக ஒருவருடன் துணை நிற்பதுபோல அது இருக்கலாம். அந்த மௌனத்திற்கும் இடமளித்து, அதைப் பேச வைப்பதே எங்கள் பணி.
தமிழில்: முத்துராணி
This piece has been translated from English to Tamil by Muthurani. Read the original here.